Tirsdag, 23 Februar 2010 22:00 Senest opdateret den Tirsdag, 23 Februar 2010 22:20
1948ல் இலங்கை சுதந்திரமடைந்ததிலிருந்து, அடக்குமுறைக்குள் வாழும் தமிழ் இனத்திற்கான ஒரு தீர்வை காண்பதற்காக, 1976ல் அனைத்து தமிழ் அரசியற்கட்சிகளும் முதல் முதலாக ஒன்று சேர்ந்தன. இந்த இணைவிற்கு முதல் முக்கிய காரணமாக இருந்தவர்கள் தமிழ் இளையோர்களே. தமிழ் அரசியல்வாதிகளால், தமிழர்களின் பிரச்சனைக்கான தீர்வை காண்பதற்காக முன்னெடுக்கப்பட்ட அனைத்து முயற்சிகளும் சிங்கள அரசினால் நிராகரிக்கப்பட்டதால், தமிழ் இளையோர்கள் கிளர்ந்தெழுந்து போராட்டத்தை தம் கையில் எடுத்தனர்.
30 வருடங்களாக அகிம்சை வழியில் தமிழ்மக்களினால் அடக்குமுறைக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட போராட்டங்களிற்கு, சிங்கள ஆட்சியாளர்களும் சிங்கள காடையர்களும் வன்முறைகளாலும் கொலைகளாலுமே பதில் தந்தார்கள். சிங்கள அரசின் இவ்விதமான தமிழ்மக்களின் மேலான வன்முறை காரணமாக, தமிழ் இளையோர் ஆயுதத்தை கையில் எடுத்து அதன் வழியாக, தமிழ் மக்களுக்கான ஒரு தீர்வைக் காணவேண்டிய சூழலுக்கு உந்தப்பட்டார்கள். தமிழ் இளையோர் ஆயுதத்தை கையில் எடுத்ததால், அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும், ஒன்றாகச்சேர்ந்து உடனடியாக ஒருமுடிவை எடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்கள்.
தமிழரசு கட்சியின் தலைமையிலே அனைத்துத் தமிழ் கட்சிகளும் இணைந்து உருவாக்கப்பட்டதே வட்டுக்கோட்டை பிரகடனம். இந்த பிரகடனமானது, இலங்கை சுதந்திரமடைந்ததிலிருந்து தமிழ் மக்கள்மேல் சிங்கள அரசினால் தொடுக்கப்பட்ட அடக்குமுறையையும், அந்த அடக்கு முறையிலிருந்து தமிழ் மக்களுக்கு சுதந்திரத்தை மீட்டுக்கொடுப்பதற்காக ஒரு தீர்வையும் விபரித்துள்ளது. அதாவது எம் இனத்தின் சுதந்திரத்திற்காக ஒரே தீர்வு இறைமையுள்ள தமிழீழத் தனியரசு என்பதை இப் பிரகடனம் உலகிற்கு பறை சாற்றியது.1977ல் அனைத்துக்கட்சிகளும் இப்பிரகடனத்தினை தமது தேர்தலில் முன்நிறுத்தி தமிழ் மக்களிடையே ஒரு வாக்கெடுப்பை நடாத்தினார்கள். இத்தேர்தலில் 80 வீதத்திற்கு அதிகமான தமிழ்மக்கள், வட்டுக்கோட்டை பிரகடனத்திற்கு ஆதரவாக, அதாவது தமிழீழத்திற்கு, தம் ஆணையை வழங்கினர். இதுபோன்று கணிசமான தமிழ் மக்களின் ஆதரவு, எந்தவொரு தமிழ் அரசியற்கட்சிக்கும் அன்றுவரை கிடைத்ததில்லை என்பது கவனிக்கப்படவேண்டிய ஒன்றாகும்.
அப்படி இருந்தும் சிறிதளவு மாற்றத்தைக்கூட தமிழர்களினால் சிங்கள ஆட்சியாளர்களிடம் இருந்து பெற்றுக்கொள்ள இயலவில்லை, அடிமைப்படுத்துதல், தரப்படுத்துதல், ஆட்கடத்தல், கொலை, கற்பழிப்பு, இன அழிப்பு என மென்மேலும் தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டன. அப்படியான ஒரு சூழ்நிலையில் ஆயுதப்போராட்டமானது தவிர்க்கமுடியாத ஒன்றாகியது. சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக விடுதலைப்புலிகள் தலைமையில் இளைஞர்களினால் ஆயுதப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இப்போராட்டமானது பெரும்பான்மையான தமிழ்மக்களின் ஆணையைப் பெற்ற வட்டுக்கோட்டை தீர்மானத்தின் அடிப்படையிலேயே முன்னெடுத்து செல்லப்பட்டது.
சுதந்திரத்திற்கான 30 வருட அகிம்சைப் போராட்டமும் அதன் பிந்திய 30 வருட ஆயுதப்போராட்டத்திற்கும் அப்பால் தமிழ்மக்கள் தமிழீழம் தான் விரும்புகிறார்களா, என மீள் உறுதிப்படுத்தவேண்டிய தேவை எம்முன் எழுந்துள்ளது. சர்வதேச அரசியல் தலைவர்களின் கருத்துக்களின்படி தமிழர்கள் சிங்களவர்களுடன் சேர்ந்து வாழ தயாராகவே உள்ளார்கள். அதாவது சிறிலங்கா அரசாங்கத்தினால் 2009 ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இனப் படுகொலையில் 50.000ற்க்கு மேற்பட்ட அப்பாவி தமிழ் மக்களை இழந்ததற்கு பின்பும் சிங்களத் தலைமையின் கீழ் வாழ முடியும் என சர்வதேசம் எதிர்பார்க்கின்றது.
உலகெங்கும் பரந்து வாழும் இளம் தமிழ் தலைமுறையினரை பிழையாக விளங்கிக்கொள்ளுதலே சர்வதேச சமூகத்தின் கருந்துகளிற்கு முக்கிய காரணமாகவுள்ளது. எவ்வளவு அதிகமாக தமிழ் இளைஞர்கள் புலம்பெயர்ந்து தாம் வாழும் தேசங்களுடன் ஒன்றித்துப் போகின்றார்களோ அதே அளவு அவர்கள் தமிழீழம் தனி நாடு எனும் எண்ணத்தை மறப்பார்கள். என அவர்கள் கனவு காண்கிறார்கள்.
தமிழ் இளையோர்கள் நாம் வாழும் தேசங்களுடன் ஒன்றிணைந்து செயற்படும் அதேவேளை, நம் தாய் மண்ணை என்றும் மறக்கமாட்டோமென சர்வதேச சமூகத்திற்கு எடுத்துக்காட்டுவோம். 62 வருட சுதந்திரத்திற்கான போராட்டமும் அதற்கான இழந்த 250.000 மக்களினதும் 35.000ற்க்கு மேற்பட்ட மாவீரர்களினதும் விருப்பத்தை ஐனநாயக முறையில், எமக்கும் தமிழினத்திற்கும் என்ன தேவை என்பதினை வெளிக்காட்டுவோம். தமிழீழத்தை நோக்கிய எமது அவாவை வெளிக்காட்டக்கிடைத்த இந்த வரலாற்று சந்தர்ப்பத்தை தமிழ் இளையோர்கள் தவறவிடக்கூடாது. ஆதலால் திசைகள் இளையோர் அமைப்பு அனைத்து டென்மார்க் வாழ் தமிழ் இளையோர்களையும் 28-02-2010 அன்று நடைபெற இருக்கும் வரலாற்று சிறப்புமிக்க இத் தேர்தலில் பங்கு பற்றுமாறு கேட்டுக்கொள்கின்றது.
திசைகள் இளையோர் அமைப்பு
டென்மார்க்


